யாழ். போதனா வைத்தியசாலை கழிவகற்றல் செயற்பாட்டிற்கு தீர்வு

19

பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று(29.03.2024) இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“போதனா வைத்தியசாலைக் கழிவுகளை தொற்று நீக்கி பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்ததுடன் பல்வேறு முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த எரியூட்டி, நீண்டகால எதிர்பார்ப்பிற்கான தீர்வாக அமைந்துள்ளது.

இதற்காக உழைத்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group