ரோகித் சர்மா சிஎஸ்கே-வுக்காக விளையாட வேண்டும்: அம்பதி ராயுடு

21

ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமனம்.
நீண்ட காலகமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார். 42 வயதாகும் எம்.எஸ். தோனி இந்த சீசனுக்கு பிறகு விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இதற்கிடையில் சிஎஸ்கே-யில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இருந்தபோதிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்காக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இதனால் ரோகித் சர்மா சற்று அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

எம்.எஸ். தோனி விளையாடாவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் ஜடேஜா உள்ளார். ஏற்கனவே ஜடேஜாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படவில்லை. இதனால் தொடரின் பாதிலேயே எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இவர்தான் என்பதுபோல் குறிப்பிடத்தகுந்த நபர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. இந்த நிலையில்தான் ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் 36 வயதான அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்பதி ராயுடு கூறியதாவது:-

எதிர்காலத்தில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி விட்டார். சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதேபோல் வெற்றிகளை குவித்தால் அது சிறப்பானதாக இருக்கும். சிஎஸ்கே-யில் கேப்டன் பதவியும் (எம்.எஸ். தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்றால்) அவரை நோக்கி இருக்கும். அதை பெறும் உரிமையை அவர் பெற்றுள்ளார். அணியை வழி நடத்த விரும்புகிறாரா? இல்லையா? என்பது அவரது முடிவு.

இவ்வாறு அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

எம்எஸ் தோனி கடந்த சீசனில் மூட்டு வலியுடன் விளையாடினார். பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2025 சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அம்பதி ராயுடன் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் எம்.எஸ். தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Join Our WhatsApp Group