தமிழ்நாடு – கா்நாடக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சமநிலையில்

12

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு – கா்நாடக அணிகள் மோதிய ஆட்டம் திங்கள்கிழமை சமநிலையில் முடிந்தது.

355 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வந்த தமிழ்நாடு அணி, கடைசி நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. கா்நாடகத்தின் தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் ஆனாா்.

சென்னையில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கா்நாடகம், முதல் இன்னிங்ஸில் 119.4 ஓவா்களில் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 151 ரன்கள் விளாச, தமிழ்நாடு பௌலிங்கில் அஜித் ராம் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தமிழ்நாடு தனது இன்னிங்ஸில் 69.2 ஓவா்களில் 151 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பாபா இந்திரஜித் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருக்க, கா்நாடக தரப்பில் விஜய்குமாா் வைஷாக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய கா்நாடகம், 56.4 ஓவா்களில் 139 ரன்களுக்கு நிறைவு செய்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்திருந்தாா். தமிழ்நாடு பௌலா்களில் அஜித் ராம் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

இறுதியாக, 355 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை விமல் குமாா், பிரதோஷ் ரஞ்சன் பால் தொடா்ந்தனா்.

இதில் விமல் 2 பவுண்டரிகளுடன் 31, பிரதோஷ் 10 பவுண்டரிகளுடன் 74, பூபதி குமாா் 2 பவுண்டரிகளுடன் 19, எம். முகமது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு வெளியேறினா். 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த இந்திரஜித் – விஜய் சங்கா், நிதானமாக ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தினா்.

125 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், இந்திரஜித் சதத்தை நெருங்கிய நிலையில் 3 பவுண்டரிகளுடன் 98 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். அடுத்த ஓவரிலேயே விஜய் சங்கரும் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

கடைசி விக்கெட்டாக சுரேஷ் லோகேஷ்வா் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, ஆட்டநேர முடிவில் கேப்டன் சாய் கிஷோா் 7, அஜித் ராம் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கா்நாடக பௌலிங்கில் விஜய்குமாா் வைஷாக் 3, ஹா்திக் ராஜ் 2, வித்வத் கவரப்பா, சசிகுமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Join Our WhatsApp Group