22 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போனவர் துறவியாக வீடு திரும்பினார்

23

சிறு வயதில் வீட்டைவிட்டு ஓடியவர்கள் அல்லது தொலைந்து போனவர்கள் பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு திரும்புவதை திரைப்படத்தில் தான் பார்த்திருப்போம். ஆனால் இதேப்போன்ற உண்மைச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. சிறுவனாக இருக்கும் போது தொலைந்து போன நபர், சுமார் 22 வருடங்கள் கழித்து துறவியாக மாறி வீடு திரும்பியுள்ளார். சரியாக 2002-ம் ஆண்டு இவர் தொலைந்து போயுள்ளார். இவருடைய பெயர் பிங்கு என தற்போது தெரிய வந்துள்ளது. 11 வயதில் தொலைந்து போனவர், திக்கு தெரியாமல் ஊரெல்லாம் சுற்றியிருக்கிறார். அதன்பின்னர் துறவி ஒருவரை சந்தித்து, அவரிடமே சிஷ்யனாக சேர்ந்துள்ளார். சரி, இத்தனை வருடங்கள் வீட்டிற்கு வராதவர், திடீரென்று இப்போது மட்டும் ஏன் வந்தார் என்பதற்கு காரணம் இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தரிசிக்கவே அவர் வீடு திரும்பியுள்ளார்.

பல வருடங்கள் கழித்து பிங்கு கிராமத்திற்கு வந்ததால் பலருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. பின்னர் தனது மாமாவிடமும் கிராமத்தில் உள்ள சில பெரியவர்களிடமும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிங்கு. உடனடியாக இந்த தகவல் டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த பிங்குவின் தந்தை ரதிபாலுக்கு சொல்லப்படவே, அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து தனது மகனைக் அடையாளம் கண்டு கொண்டார். பிங்குவின் வயிற்றில் உள்ள காயத் தழும்பே அடையாளம் கண்டுபிடிக்க உதவியது. இதற்கிடையில் சந்நியாசியாக மாறிய பிங்கு, பாரம்பரிய இந்திய இசைக் கருவியை வாசித்தபடியே பாடிய வீடியோ ஒன்று பிரபல சமூக ஊடகமான X தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ராமர் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு, பிங்குவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் எவ்வுளவோ முயற்சித்தனர். ஆனால் பிங்குவோ, தன்னுடைய கிராம மக்களிடம் யாசகம் வாங்கிவிட்டு அங்கிருந்து மறுபடியும் தான் தங்கியிருக்கும் மடத்திற்கே கிளம்பிவிட்டார். இந்நிலையில், தன் மகன் சந்நியாசியாக ஏற்றிருக்கும் மதப் பிரிவிற்கு அன்னதானம் செய்ய உள்ளதாகவும், அப்போதுதான் பிங்கு மறுபடியும் வீடு திரும்புவான் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார் பிங்குவின் தந்தை ரதிபால்.

ஆனால் இதற்கு எப்படியும் தோராயமாக ரூ.10 லட்சம் செலவாகும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு துறவிக்கும் உணவும் தட்சணையும் கொடுக்க வேண்டுமாம். பின்னர் இந்த தொகை பிங்குவின் தந்தைக்காக ரூ.3 லட்சமாக குறைக்கப்பட்டது. தன்னிடம் இருக்கும் விவசாய நிலத்தை அடமானம் வைத்தாவது தேவையான பணத்தை செலுத்தி எப்படியாவது என் மகனை மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வருவேன் என நம்பிக்கையோடு இருக்கிறார் ரதிபால்.

Join Our WhatsApp Group