P2P; ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வெற்றி பெறட்டும்’ – சீமான்!

0
10

திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகின்ற ஈழச்சொந்தங்களின் தொடர் போராட்டமும், பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணியும் வெற்றிபெறட்டும் என தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“உள்நாட்டுப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பு நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டமும், பொத்துவிலில் தொடங்கியிருக்கும் பேரணியும் நம்பிக்கையைத் தருகிறது.

பேரினவாத ஆட்சியாளர்களின் கோர அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் ஈழச் சொந்தங்களைப் பெரிதும் போற்றுகின்றேன்.

தமிழர்களின் போராட்டங்களுக்குச் செவிசாய்க்காத இலங்கை அரசு இன்னும் அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதை அண்மைக்காலமாக ஈழத்தில் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை முழுக்க இராணுவ மயமாக்குவது, தமிழர் காணிகளை ஆக்கிரமிப்பது, புதிய சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி, பூர்வீகக்குடிகளான தமிழர்களின் இருப்பைக் குறைப்பது, பௌத்த விகாரைகளைப் புதிதாக நிறுவுவது, தமிழ் மக்களின் இன, மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கான வரலாற்று அடையாளங்களை முற்றிலுமாக அழிப்பது என மறைமுகமாகவும், நேரடியாகவும் அடக்குமுறைகளைத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவர்களது உறவுகளால் தொடங்கப்பட்டுள்ள நீதிக்கான இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here