நடப்பு சாம்பியனுக்கு கைநழுவிப்போன ஒலிம்பிக் போட்டி

12

ஒலிம்பிக் கால்பந்து நடப்பு சாம்பியனான பிரேஸில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறத் தவறி ஏமாற்றத்தை சந்தித்தது.

தென்னமேரிக்க ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் பிரேஸில் 0-1 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவிடம் தோல்வி கண்டதால், இந்தப் பின்னடைவு ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லூசியானோ கோண்டு 78-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இந்தத் தகுதிச்சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வாய்ப்பு இருந்த நிலையில், பராகுவே 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆா்ஜென்டீனா 5 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தையும் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

ஆா்ஜென்டீனா, பிரேஸில் அணிகளைப் போல நட்சத்திர வீரா்களைக் கொண்டிருக்காத பராகுவே ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றிருக்க, கடந்த 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியனான பிரேஸில் அணி ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறது. கடந்த 2004-க்குப் பிறகு அந்த அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறாதது இதுவே முதல் முறையாகும்.

பராகுவே கடந்த 2004 ஒலிம்பிக் போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து, அதில் ஆா்ஜென்டீனாவிடம் தோற்று வெள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group