தெற்குக் கடலில் 02 இழுவைப் படகுகளில்65 கி.கி. ஹெரோயின் மீட்பு: 11 பேர் கைது

16

** கடற்படை, போலீஸ் கூட்டு நடவடிக்கை

– மாத்தறை, கந்தறை, தெவுந்தரவைச் சேர்ந்த 28 – 52 வயதுடையவர்கள்

– 2024 ஜனவரியில் கடற்படையால் ரூ. 480 கோடி போதைப்பொருட்கள் மீட்பு

– இது தொடர்பில் பொதுமக்களிடமும் ஒரு வேண்டுகோள்

தெற்கு கடற்பரப்பில் 65 கிலோகிராமுக்கும் அதிகமான ரூ. 1626 மில்லியன் (ரூ. 162.6 கோடி) பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இன்று (20) இலங்கை கடற்படையினர் தெவுந்தர முனையிலிருந்து சுமார் 100 கடல் மைல் (சுமார் 185 கிமீ) தொலைவில் தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 65 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகையும் (Trawler) அதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடி இழுவைப் படகையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும், புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தெவுந்தர முனையிலிருந்து சுமார் 100 கடல் மைல் (சுமார் 185 கிலோமீற்றர்) தொலைவில் இந்த விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படை கப்பல் சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை தெற்கு கடற்பரப்பில் நேற்று (19) காலை இடைமறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த படகை சோதனையிட்டதில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 கோணிகளில் 65.076 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, போதைப்பொருளை கடத்திய இழுவை படகில் இருந்த 5 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடி படகையும் அதில் பயணித்த 6 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி, இன்று (20) முற்பகல் 2 பல நாள் மீன்பிடி இழுவை படகுகளுடன், 11 சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் காலி துறைமுகத்திற்கு சட்ட நடவடிக்கைகளுக்காக கொண்டு வரப்பட்டனர்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் தெரு மதிப்பு ரூ. 1626 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 முதல் 52 வயதுக்குட்பட்ட மாத்தறை, கந்தறை, தெவுந்தர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட 65.076 கி.கிராம் ஹெரோயின் மற்றும் 2 மீன்பிடி இழுவை படகுகளுடன் 11 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

2024 ஜனவரி மாதம் மாதம் மாத்திரம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, ​​ஹெரோயின் மற்றும் ஐஸ் (Crystal Methamphetamine) ஆகிய போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் தெரு மதிப்பு ரூ. 4800 மில்லியன் எனவும் அவை சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் போல் வேடமணிந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை கடற்படை அல்லது உரிய சட்ட அமுலாக்க பிரிவுடன் அறிவிக்குமாறு கடற்படை பொதுமக்களை வலியுறுத்துகின்றது.

Join Our WhatsApp Group