திரிஷா குறித்து அவதூறு பேச்சு மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு வலுக்கிறது: ‘பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’

45

சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில், திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப் பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிஷா வெளியிட்டிருந்த பதிவில், ‘மன்சூர் அலிகான் மனித குலத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்’ என்று கடும் கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது ஒரு அருவெறுப்பான செயல். பெண்களைப் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் இப்படி சிந்திப்பது வெட்கக் கேடானது.

பின்விளைவுகள் குறித்து கவலைப்படாமல், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர் பேசுவதை பார்க்கும் போது அவமானமாக இருக்கிறது’ என்றார். அதுபோல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவில், ‘மன்சூர் அலிகான் பேசியதை அறிந்து மனம் உடைந்தேன். அது என்னை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் சரி.

பெண்கள், சக கலைஞர்கள், தொழில்முறை வல்லு நர்கள் என்று அனைவருக்குமான மரியாதை சமரசமின்றி வழங்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘லியோ’ படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்திருந்தனர்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள பதிவில், மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அவர் வெறுக்கத்தக்க மனிதர். வெட்கப்படுகிறேன் மன்சூர் அலி கான்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பல திரையுலக பிரமுகர்களும், ரசிகர்களும் திரிஷாவுக்கு ஆதரவாகவும், மன்சூர் அலிகானின் கருத்துக்கு எதிராகவும் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனது தரப்பு விளக்கத்தையும் மன்சூர் அலிகான் வெளியிட்டார். என்றாலும் கூட, தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

Join Our WhatsApp Group