சர்ஃபிங் சாதனை – பெரும் அலையை கடந்த வீராங்கனை

11

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் 31 வயதான லாரா எனெவெர் (Laura Enever).மேற்கத்திய நாடுகளில் பிரபலமான, பலகையில் நின்று கொண்டு கடல் அலைகளின் மீது நீந்தி விளையாடும் “சர்ஃபிங்” (Surfing) விளையாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் லாரா.11 வயதான போது சர்ஃபிங் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்த லாரா, 2009ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.இரண்டு வருடங்கள் கழித்து உலக சர்ஃபிங் சேம்பியன்ஷிப் (World Surfing Championship) சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.

வழக்கமான உயரத்தை விட மிக உயரமான அலைகளின் வழியாக சர்ஃபிங் செய்யும் நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டார், லாரா.இவர் கடந்த 2022 ஜனவரி மாதம் ஹவாய் தீவில் 43.6 அடி உயர அலையை சர்ஃபிங் மூலம் நீந்தி கடந்தார். கின்னஸ் உலக சாதனை பதிவு (Guinness World Records) நிறுவனம் மற்றும் உலக சர்ஃபிங் லீக் (World Surfing League) ஆகியவை இதனை உறுதி செய்துள்ளன.இந்த தகவல் வெளியானதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த லாரா இது குறித்து தெரிவித்ததாவது:

அந்த அலையை நீந்தி கடக்கும் போது அதுதான் நான் இதுவரை எதிர்கொண்டதிலேயே மிக பெரிய அலை என்பதை உணர்ந்திருந்தேன். ஆனால் பல மாதங்கள் கடந்து வரும் இந்த உலக சாதனை அறிவிப்பு நான் எதிர்பாராதது. இது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனக்கு முன்னர் இந்த விளையாட்டில் ஈடுபட்ட பலருக்கும் எனது நன்றி.

அவர்களால்தான் எனக்கு சர்ஃபிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் மறைமுகமாக என்னை ஊக்குவித்தவர்கள்.இவ்வாறு லாரா கூறினார்.2016 ஜனவரி மாதம் பிரேசில்-அமெரிக்கரான ஆண்ட்ரியா மோல்லர், 42 அடி உயர அலையை நீந்தி கடந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group