பட்ஜெட் ஊடாக DIGIECON பொருளாதார எண்ணக் கருவை நடைமுறைப்படுத்தும் முன்மொழிவுகள்: ஜனாதிபதி முன்வைப்பார்

15

*இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன

2030 ஆம் ஆண்டாகும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் (DIGIECON) பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைப்பார் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் முதல் தடவையாக டிஜிட்டல் பொருளாதாரத்தை பரந்த அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ் கட்டியெழுப்புமாறு தொழில்நுட்ப அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அனைத்து தரப்பினருடனும் மிகவும் வெற்றிகரமான பல கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், அதன் போது முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சச்சிந்ர சமரரத்ன குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட “ஒன் ஓவன் உரை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சச்சிந்ர சமரரத்ன, பின்வருமாறு குறிப்பிட்டார்.

முன்னர் ஈ- இலங்கை பற்றி பேசப்பட்டது. தற்பொழுது டிஜிட்டல் எனும் விடயம் முன்னுக்கு வந்தது. டிஜிட்டல் என்ற விடயம் ஸ்மார்ட் போனில் வந்துவிட்டது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்கள் இன்று டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன. இந்த பெரிய மாற்றம் இணையத்தின் மூலம் ஏற்பட்டது.

இந்த ஆண்டு, ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், டிஜிகொன் (DIGIECON) பொருளாதார எண்ணக் கரு முன்வைக்கப்பட்டுள்ளது. இது 2030க்கான வெற்றிகரமான திட்டமாகும். டிஜிட்டல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. அரச மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முதல் படி தற்போது எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் மயமாக்கலின் பங்களிப்பை 20% வரை அதிகரிக்க முடியும். பொருளாதாரத்தை பாரிய அளவில் மேம்படுத்த முடியும். டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதில் இலங்கையில் பலர் பங்களித்துள்ளனர்.

இந்த திட்டம் அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக இது பற்றிய தெளிவைப் பெறலாம். டிஜிட்டல் பொருளாதாரம் புதிய தலைமுறைக்கு பெரும் பங்கை அளித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் இருந்து யாரும் விலக முடியாது.

அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதால், இந்தத் திட்டத்தை நீண்டகாலத்திற்குச் செயல்படுத்த முடியும். அதன் போது முதலீடுகள் அதிக அளவில் வரலாம். சர்வதேச முதலீட்டாளர்கள் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படையில் தங்கள் முதலீடுகளுக்கு நாடுகளைத் தெரிவு செய்கிறார்கள்.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு அரசின் ஆதரவை வழங்குவது மிகவும் முக்கியம். இதற்காக நிறுவனமொன்றை ஏற்படுத்தினால் நல்லது. டிஜிகொன் யோசனையை ஜனாதிபதி தான் முன்வைத்தார். அரச மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதியே பரிந்துரைத்தார். இந்த அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு உயர்த்த ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். மக்களின் மனோபாவத்தை மாற்றி இதற்கு பங்களித்தால், பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்தலாம். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தன. அந்த நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தைப் புரிந்துகொண்டு நமக்கு உகந்த அடிப்படையில் நிறுவனமொன்றை நிறுவுவது முக்கியம்.

மற்ற நாடுகள் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளன. ஏற்றுமதி துறையை மேம்படுத்த, டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது அவசியம். தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக, கடந்த 10 ஆண்டுகளாக உலக வங்கியுடன் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்த ஒரு நிறுவன கட்டமைப்பு மற்றும் பட்ஜெட் ஊடான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.

தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3% டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக செலவிடப்படுகிறது. இதை 20% ஆக உயர்த்துவதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும். டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் பொதுச் சேவை எப்படி மாறும், மக்களின் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை பார்க்க முடிகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக இலங்கைக்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், டிஜிகொன் (DIGIECON) பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
12-11-2023

Join Our WhatsApp Group