சீனாவின் ஆதரவு டிஜிட்டல் கல்வியை மேலும் வலுப்படுத்தும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

18

கல்விச் சீர்திருத்தங்களால் இயங்கும் டிஜிட்டல் கல்வியை மேலும் வலுப்படுத்த சீனாவின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சீனக் குடியரசின் கல்வி அமைச்சர் Huai Jinpeng உடனான விசேட சந்திப்பைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கூறியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இலங்கையின் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 42வது அமர்வில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சீனக் கல்வி அமைச்சரை சந்தித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் Huawei நிறுவனத்துடன் இலங்கையின் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

சீனக் கல்வி அமைச்சருடன் இதனை நினைவு கூர்ந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கையில் பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான மூலோபாய பங்காளியாக Huawei நிறுவனம் முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் தொழில்நுட்ப அதிகாரி பயிற்சி மற்றும் உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கும் Huawei வழங்கிய ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group