வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்

20

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு – கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்டவர்கள் இருக்கின்ற நிலையில், பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில், குறித்த விவகாரம் ஓரவஞ்சனையான தீர்மானங்களாக பாதிக்கப்படுகின்றவர்களினால் பார்க்கப்படும் என்பதுடன் தேவையற்ற அரசியல் குழப்பங்களுக்கும் வழிவகுக்கும் எனவும் சுட்டிக் காட்டினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் மூலமே வெற்றிடங்களை நிரப்புவதற்கு முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அண்மையில் யாழ். பல்கலைக் கழகத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த ஏழு சிற்றூழியர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்புகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், கடற்றொழில் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

அதேவேளை இன்றைய கலந்துரையாடலில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் போன்றவற்றில் நந்திக் கொடி பறக்கவிட்டு தீபங்களினால் அலங்கரிப்பதற்கும், தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசுவெசும திட்டத்திற்கு ஆறுதல் திட்டம் என்ற மொழிபெயர்ப்பினை தமிழ்மொழியில் பயன்படுத்தவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

Join Our WhatsApp Group