தேராவில் மாவீரர் துயிலுமில்ல விவகாரம்; இராணுவத்தினர் குவிப்பு

19

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரால் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர்களது உறவுகள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணி பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்க இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையுமே உருவாகியுள்ளதாக போரில் உயிரிழந்த வீரர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் குறித்த பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி இன்று காலை 9 மணிக்கு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் “இராணுவத்துக்குரிய பிரதேசம் உட்செல்ல தடை” என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் எவ்வித பயனும்கிட்டவில்லை, இதனையடுத்து இன்றைய தினப் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பதாகை இராணுவத்தினரால் வைக்கப்பட்டுள்ளதோடு அதிகளவான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group