இஸ்ரேல் விவசாயத் துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை மதிப்பிட்டதன் பின்னர், குறித்த வேலை வாய்ப்புகளுக்கு இலங்கை பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் நேற்று (20) பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இஸ்ரேலில் நடந்த மோதலில் உயிரிழந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இலங்கை தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர் என எங்களுக்கு அறியக் கிடைத்தது.
அதற்காக நாங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், சிரமத்தில் உள்ளவர்கள் இருப்பின் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்ல தயாராக உள்ளவர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
இஸ்ரேல் அரசுடன் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி விவசாய துறையில் 1000 வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளோம். பாதுகாப்பு நிலவரத்தைப் பார்த்து அவர்களைப் பரிந்துரைப்போம்” என தெரிவித்தார்.