(நிப்ராஸ்)
ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மீளவும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை கல்விச் சமூகத்துக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உலமாக்கள் கல்லூரி என ஆரம்பிக்கப்பட்ட இந்த ரிதிதென்னை பல்கலைக்கழகம் ஆரம்பத்தில், முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்ற எண்ணக்கருவிலேதான் ஆரம்பிக்கப்பட்டது. சவூதி அரேபியா உள்ளிட்ட அரபுநாடுகளின் நன்கொடைகள் அதிகளவு கிடைத்த தற்கு, இக்கல்லூரியின் நோக்கமும் பிரதான பங்களித்திருந்தது.
பள்ளிவாசல்களில் மாத்திரம் வேலைபுரியாமல் உலமாக்கள் மற்றும் மௌலவிமார்கள் பொறியியலாளராக, வைத்தியராக, கணக்காய்வாளராக மற்றும் கணினி நிபுணர்களாக வளர வேண்டும் எனப் பகிரங்கமாக கருத்துக்களை வௌியிட்டார் ஹிஸ்புல்லா. 2012 இல், நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகி 2018 இல் நிறைவுறவிருந்தன நிர்மாணப்பணிகள். திடீரென நாட்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதலுடன் இக்கல்லூரிக்கும் முடிச்சுப் போடப்பட்டதால், ஹிஸ்புல்லா தனித்து விடப்பட்டார்.
இத்தனிமையிலிருந்து விடுபட கல்லூரியின் நோக்கத்தை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஹிஸ்புல்லா, மதகுருமார் கல்லூரி என்றும் சகல மதங்களதும் நல்லிணக்க கலாசாலை எனவும் கருத்துக்கூற நிர்ப்பந்திக்குமளவுக்கு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான நிலைமைகள் இருந்தன.
பல சவால்களைக் கடந்து மீளவும் கல்லூரி இவரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு ஜனாதிபதியின் அதிகரித்த தலையீடு இருந்ததாக ஹிஸ்புல்லாவே ஏற்றுக் கொள்கிறார். இதிலிருந்து மதவாதத்தின் பிடியிலும்,சிந்தனையிலுமுள்ள ஆட்சியிலிருந்து விடுபட ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கிறார் எனவும் எண்ணத்தோன்றுகிறது.எதிர்வரும் தேர்தல்தான், ரணில் போட்டியிடக்கூடிய கடைசித் தேர்தலாக இருக்கப் போகிறது.ஆயுளின் இந்தளவு உச்சத்துக்கு வந்துள்ள ரணில். கடைசியாக ஒரு தேர்தலில் வெற்றிபெற்றதாகக் காட்டும் விம்பத்தை ஏற்படுத்துவதுதான், அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு புத்துயிரூட்டும். இந்தக் கோட்பாடுகளில் இயங்கும் ரணில், சிறுபான்மைக் கட்சிகளை வளைத்துப் பிடிக்கும் கைங்கரியங்களில் இறங்கியுள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளைப் பெறுவதற்கும் முஸ்லிம்களிடம் செல்வாக்கை அதிகரிக்கவும், இக்கல்லூரி மீள ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் நோக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியை வழிக்கு கொண்டுவருவது அல்லது பலவீனப்படுத்துவது இரண்டில் ஒன்றை வெற்றிகொள்வதில் தான், ரணிலின் தேர்தல் வெற்றியும் தங்கியுள்ளது.
அடையாளங்களை சாதனையாக்கி அல்லது சாதனைகளை அடையாளங்களாக்கி வளரும் அரசியல் மரபிலிருந்து முஸ்லிம் தனித்துவம் விடுபடுவதில்லை. இந்த வகையில் அஷ்ரபுக்கு அடுத்த படியாக சில முஸ்லிம் தனித்துவ அடையாளங்களை நிறுவியுள்ளவர் ஹிஸ்புல்லா.
காத்தான்குடியில் முஸ்லிம்களின் வரலாற்றுப் பூர்வீகத்தை சித்தரிக்கும் முஸ்லிம் நூதனசாலையை ஸ்தாபித்ததால், பிரதேசத்தில் இவரது அரசியல் பலம் ஸ்திரமாகவே உள்ளது.
இதற்கும் ஒரு படி மேல்சென்றுதான், உலமாக்கள் கல்லூரியை நிறுவ முற்பட்டார்.இப்போது சர்வ மதங்களின் கலாசாலையாக மிளிரவுள்ள இக்கல்லூரியின் அடையாளத்திலிருந்து தான் இவரதும், ரணிலினதும் அரசியல் அத்திவாரங்கள் எழுப்பப்பட உள்ளன.