தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு துளியும் இல்லை: அமைச்சர் துரைமுருகன்

29
  • காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும்.
  • கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது.

புதுடெல்லி:

தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும். இந்த நீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் காய்ந்து கிடக்கிறது.

இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் 12 பேர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்று டெல்லி சென்று இருந்தனர்.

நேற்று மாலை 4 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் மத்திய மந்திரியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமரை பார்க்க மத்திய மந்திரி சென்று விட்ட காரணத்தால் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்திக்கவில்லை.

இதனால் இன்று காலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் 12 பேர் மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

மத்திய மந்திரியை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- மத்திய மந்திரி ஷெகாவத்தை சந்தித்தீர்களே? என்ன சொன்னார்?

பதில்:- வழக்கமான சந்திப்புதான். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறார்கள்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். கர்நாடகாவில் கிட்டத்தட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருக்கிறது. ஆங்காங்கே சின்னசின்ன அணையை கட்டி கே.ஆர்.சாகர் வரும் முன்பே தண்ணீரை தேக்கி வைத்து உள்ளனர்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு 13-ந்தேதி 12,500 கனஅடி கொடுக்கலாம் என்று அவங்களே சொன்னார்கள். ஆனால் 5 ஆயிரம்தான் காவிரி மேலாண்மை ஆணையம் கொடுக்க சொல்லி உள்ளது. 5 ஆயிரம் சொன்னாலும் நேற்று கூட 3,500 கனஅடி தான் திறந்து விடப்பட்டு உள்ளது.

கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது. அதனால் மத்திய அரசு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்க வந்தோம். நாங்கள் அணையை முழுவதும் திறந்து விடுங்கள் என்று கேட்கவில்லை.

தண்ணீரை எப்படி பங்கீட்டு கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழி சொல்லி உள்ளது. அதன்படி கூட தண்ணீர் தரவில்லை. அதனால் நாங்கள் அப்பீல் செய்தோம். எனவே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஆனால் நாங்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்குகிறீர்கள். அவர்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்கி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் எங்களுடைய கொடுமை என்றோம்.

உடனே மத்திய மந்திரி ஒழுங்காற்று குழு சேர்மனை கூப்பிட்டு கேட்டார். அவர் ஒரு கணக்கு சொன்னார். 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் தர முடியும் என்று கூறினார். கர்நாடகாவில் குடிநீருக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வளவுதான் குடிநீருக்கு கொடுப்பது.

Join Our WhatsApp Group