SPL REPORT |இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்த இந்திய அணி வகுத்த திட்டம்

31

இந்தியா பந்துவீச்சை துவங்கிய பொழுது, அதிரடியாக ஆரம்பிக்கவில்லை. வலதுகை இடதுகை பேட்ஸ்மேன்கள் இருவருக்குமே பந்தை வெளியில் எடுக்கும் திட்டம்தான் இருந்தது.

இரண்டு விக்கெட் விழும் வரையில் அதேமுறையில் சென்றார்கள். இன் ஸ்விங் மற்றும் உள்ளே தள்ளுவது என்று விக்கெட்டுக்காக ரன்களை கசிய விடும் போக்கைக் கொண்டிருக்கவில்லை.

இரண்டு விக்கெட் விழுந்ததும் இருவருமே பந்தை உள்ளே தள்ள ஆரம்பித்தார்கள். இதில் சிராஜுக்கு வெற்றியாக சதீரா விக்கெட் கிடைத்தது. இடத கை அசலங்கா வர, திட்டம் வழக்கம்போல் இயல்பாகவே வெளியே என சென்றது.

அடுத்து வலது கை தனஞ்செயா வர சிராஜ் பந்தை உள்ளே கொண்டு வந்தார். அந்தப் பந்து பவுண்டரிக்கு செல்ல, மீண்டும் மிகக் கட்டுப்பாட்டோடு பந்தை வெளியே எடுத்தார். அழுத்தத்தின் காரணமாக தேவையே இல்லாமல் தனஞ்செயா விக்கெட்டை கொடுத்தார்.

இந்தியா தனது பந்துவீச்சை பொறுப்போடு கவனமாகத்தான் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கிடைத்த வெற்றி, அடுத்து இயல்பாகவே இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை அதிரடியாக நகர்த்தியது.

இன்று ஸீம் மூவ்மெண்ட் பெரிய அளவில் இல்லை. ஆனால் ஸ்விங் எதிர்பாராத அளவுக்கு இருந்தது. அது புரிந்ததும் உலகத் தரமான இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் தரமாக விளையாடி விட்டார்கள்.

குறிப்பாக முகமது சிராஜ் ஆரம்பத்தில் ஸ்விங் இருப்பதை உணர்ந்து வழக்கமான சீமில் வீசி அவுட் ஸ்விங் எடுத்தார். பிறகு ஸ்விங் குறைய, உடனடியாக ஸ்கிராம்பெல்டு சீமுக்கு மாறி, குஷால் மெண்டிசை அற்புதமாக அடித்தார்.

சிலநாள் சிலருக்கு என்று அமையும். இந்த வகையில் சிராஜுக்கு என்று அமைந்த நாள் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நாளாக அமைந்துவிட்டது!
(நன்றி – ரிச்சர்ட்)

Join Our WhatsApp Group