கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்ய வேண்டும் (video)

32

“திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

திருகோணமலையில் நேற்று (17) தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மீது தாக்குதல் மேற்கொண்ட சிங்களக் காடையர் கும்பல், அந்த ஊர்தியில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் கற்கள், கொட்டன்கள் மற்றும் ஹெல்மட் கொண்டு கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் முன்னிலையில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தத் தாக்குதல் நடத்தியவர்களை இலகுவில் அடையாளம் காணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம்.” – என்றார்

Join Our WhatsApp Group