மனித உரிமைகள் பேரவை அறிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகளும் வெளிக்கொண்டு வரப்படும்; ஐ.நா உறுதி

24

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் எதிர்வரும் காலங்களில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச்சை பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலு குமார் மற்றும் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் கருத்து தெரிவித்த மனோ கணேசன்,

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையக மக்கள் தொடர்பில் குறிப்பிடாமை ஒரு குறைப்பாடு என்பதை மார்க்-ஆண்ட்ரே ஏற்றுக்கொண்டார்.

இந்நிலைமையே தொடர்ந்தும் எதிர்காலத்தில் தொடராது நிவர்த்தி செய்யப்படும். ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே உறுதியளித்துள்ளார்.

இலங்கையில், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) ஆகியவை இன்னமும் இழுபறியிலேயே இருக்கின்றன.

இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்கு பிரதான காரணம் என நான் கூறிய கருத்தை மார்க்-ஆண்ட்ரே ஏற்றுக்கொண்டனர்.

பதினைந்து இலட்சம் மலையக தமிழர் மத்தியில் சுமார் ஏழரை இலட்சம் பேர் இன்னும் பெருந்தோட்டங்களிலேயே வாழ்கின்றனர்.

அவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் தோட்ட தொழிலாளர்கள். இந்த பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களே இலங்கை சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியவர்கள் என்ற தரவுகளுடனான ஆவணத்தை எழுத்து மூலமாக மார்க்-ஆண்ட்ரேவுக்கு வழங்கினோம்” என தெரிவித்தார்.

Join Our WhatsApp Group