ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் சுதந்திர மக்கள் முன்னணி

22

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த சுதந்திர மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

முழு நாடும் ஏற்றுக்கொள்ளும் புகழ்பெற்ற ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முன்னணி முடிவு செய்துள்ளதாக அறியகிடைத்துள்ளது.

அண்மையில் உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சியின் பல கட்சிகள் இணைந்து சுதந்திர மக்கள் முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கின.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அந்த முன்னணியின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றுள்ளது.

சுதந்திர மக்கள் முன்னணியின் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மோத வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஒன்றிணைய வேண்டும் எனவும் இதன் போது பேசப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவது தொடர்பில் விமல் வீரவங்ஸ மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் அரசியல் அறிவுள்ள புகழ்பெற்ற நபரை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்படியான ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் விமல் வீரவங்ஸ மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரின் ஒத்துழைப்புகளை பெற்று ஒன்றை இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள முடியும் என பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Join Our WhatsApp Group