குற்றச்சாட்டை மீளாய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரும் மைத்திரிபால சிறிசேன

44

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி மூலம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள புதிய விடயங்கள் மற்றும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு அந்த தாக்குதல் தொடர்பில் அடிப்படை உரிமை மனுக்கள் ஊடாக தனக்கு எதிராக சுமத்தப்ப்டுள்ள குற்றச்சாட்டை மீளாய்வு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

புதிய போக்குகளின் பின்னர் இந்த மனுக்களை மீண்டும் விசாரிக்கும் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ள முஸ்தபா, செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பிரதிவாதிகள் செயற்படாததன் காரணமாக அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் செலுத்துமாறு உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையில் 15 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி இழப்பீடு செலுத்தும் அலுவலகத்திடம் செலுத்தியுள்ளதாக அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள 85 மில்லியன் ரூபா பணத்தை வருடத்திற்கு 8,500,000 ரூபா என்ற கணக்கில் 10 தவணைகளாக எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து 2033 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரை செலுத்தி முடிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனிடையே தமது தரப்புவாதி அபராத தொகையில் பாதி தொகை செலுத்தியுள்ளதாகவும் எஞ்சியுள்ள தொகையை அவரால் செலுத்த முடியாது எனவும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு ரீதியான கடமையை நிறைவேற்ற தவறியதன் காரணமாக நிலந்த ஜயவர்தன 75 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

Join Our WhatsApp Group