ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகுவதாக கூறி முன்னிலை சோசலிசக் கட்சியை முடக்க சதி

53

ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகுவதாக கூறி முன்னிலை சோசலிசக் கட்சியை முடக்க சதி. ஆயுதப்போராட்டத்துக்கு தயாராகின்றனர் எனக்கூறி முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடுவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலய (மக்கள் போராட்டம்) காலத்தில் மக்கள் சக்தி பற்றி அதிகம் பேசப்பட்டது. பாராளுமன்றம் உட்பட மக்கள் பிரதிநிதித்துவ சபைகளுக்கு வெளியில் கட்டியெழுப்பட வேண்டிய மக்கள் சக்தி குறித்து கருத்தாடல் உருவானது.

ஏனெனில் கடந்த 75 வருடகாலமாக மக்கள் பிரச்சினை, சமூகப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் வேலைத்திட்டம் உருவாக்கப்படவில்லை.

மாறாக பொருளாதார பிரச்சினை தலைதூக்கியது. இனப்பிரச்சினை மேலோங்கியது. அரச வளங்கள் விற்கப்பட்டன. தேர்தல் ஊடாக ஆட்சிகள் மாறின.

ஆட்சிக்குவந்த அரசுகளால் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனால்தான் பாராளுமன்றத்துக்கு வெளியில் மக்கள் சக்தியொன்று அவசியம் என முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியது.

எனினும், எம்மை வேட்டையாடும் நோக்கில் இக்கூற்றை திரிவுபடுத்தி சூழ்ச்சியான முறையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதாவது பாராளுமன்றத்தை, தேர்தலை புறக்கணிக்கும் இவர்கள், தேர்தலைவிட அரகலவை நம்புவது, ஆயுதப்போராட்டத்துக்காகவே என பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடும் நோக்கிலேயே இப்படியான சூழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உண்மை அதுவல்ல. நாம் தேர்தலை எதிர்கொள்வோம். மக்கள் சக்தி ஊடாக பலத்தை கட்டியெழுப்புவது பற்றி பேசுகின்றோம்” என்று தெரிவித்தார்.

Join Our WhatsApp Group