அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை: பெண் உயிரிழப்பால் துருக்கிக்கு எதிராக இங்கிலாந்து விழிப்புணர்வு

22

பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் மெலிஸா கெர் எனும் 31-வயது பெண். இவர் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.சமீபத்தில் இவருக்கு தனது உடலின் முதுகெலும்பிற்கு கீழே உள்ள பின்புற பகுதிகளில் தசைகள் குறைவாக இருப்பதாக தோன்றியதால், இப்பகுதியை அழகுப்படுத்த மருத்துவ வழிமுறைக்கான தகவல்களை தேடினார்.

இதற்காக துருக்கி நாட்டில் பிரேசிலியன் பட் லிஃப்ட் (Brazilian butt lift surgery) எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை தெரிந்து கொண்டார். நுணுக்கமான இம்முறையில் உடலின் சதை மிகுந்த பாகங்களிலிருந்து சதை துணுக்குகள் எடுக்கப்பட்டு, சதை குறைந்த பகுதிகளில் ஊசி மூலம் உட்செலுத்தப்படும். பிறகு சில நாட்கள் மாத்திரை, மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ளது மெடிக்கானா கடிக்கோய் மருத்துவமனை (Medicana Kadikoy Hospital). இங்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து அறிந்த கெர், அம்மருத்துவமனையை தொடர்பு கொண்டார்.

அறுவை சிகிச்சை குறித்து லேசான பதற்றம் அவருக்கு ஏற்பட்டதால், இதற்கு முன்பாக அதே சிகிச்சையை செய்து கொண்டவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்க கோரினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அனுப்பவில்லை.இருப்பினும், கெர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்ததால், அவர் துருக்கி சென்றார். அங்கு அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை முடிந்ததும், கெர் அம்மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இங்கிலாந்தில், இது குறித்த விசாரணையில் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துக்கள் குறித்து குறைவான தகவல்களே துருக்கி மருத்துவமனையால் தரப்பட்டிருக்கிறது என தெரிய வந்துள்ளது.அயல்நாடுகளில் அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் இது குறித்து அங்கு சென்று அழகுக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இங்கிலாந்தின் சுகாதார மந்திரிக்கு கடிதம் எழுதப்போவதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

Join Our WhatsApp Group