ஆலயத்தில் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

41

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு (13) அலங்கார பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ரவுடிக்கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவருக்கு இன்று (14) அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த ரவுடிக்குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்ற குழுவினர் என்றும் கடந்த காலங்களில் பல தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கும் பொது மக்கள் இந்தக் குழுவினரால் கிராமத்தில் நிம்மதியற்ற நிலைமை உருவாகியுள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

கஞ்சா, கசிப்பு என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் இந்தக் குழுவினர் தங்களது செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற போது பொலிஸாரால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை இவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினர் மீது பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group