(நிப்ராஸ்)
- இலங்கை யுக்திகள் காலைவாரியது
- காய் நகர்த்தல்களை திணறடிக்க செய்யும் செனல் – 4 காணொளி
சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கு அல்லது ஆறுதல் பெறும் பொருட்டு இலங்கை அரசாங்கம் கையாண்ட யுக்தி இனிமேல் செல்லுபடியற்றதாகும் நிலைமைகள் உருவாகி வருகின்றன. இந்நிலைமை உருவாகும் பட்சத்தில் அரசாங்கத்தின் பொருளாதார மீண்டெழுகைச் செயற்பாடுகள் மற்றும் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகள் சகலதும் பயனற்றுப் போகலாமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
யுத்தக் குற்றம் மற்றும் போர் பொறிமுறைகள் இன்னும் காணாமல்போனோர் உள்ளிட்டவற்றில் எதிர்கொண்ட சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கவும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் உள்ளூர் விசாரணை என்ற சொற்பிரயோகத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி வந்தது. இவ்விடயத்தில் நம்பிக்கை இழந்த மேற்குலகத்தை நம்பிக்கையூட்டுவதற்கு “ஹைபிரட்” விசாரணைகளென ஒரு படி மேலேயும் சென்றிருந்தது இலங்கை. வௌிநாட்டு நீதியரசர்களை உள்ளடக்கி உள்நாட்டில் நடாத்தப்படும் விசாரணைகளையே “ஹைபிரட்” விசாரணை என்பர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் இவ்வகையான விசாரணைக்கு இணங்கியிருந்து. ஜி,எஸ்,பி வரிச்சலுகையை பெறுவது, இலங்கை இராணுவத்தினரைப் பாதுகாப்பது மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அழுத்தத்தில் இயங்குவதிலிருந்து ஐரோப்பிய அரசுகளை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட ராஜதந்திரங்களுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் இந்த “ஹைபிரட்” விசாரணைக்கு இணங்கியது. அந்நேரத்தில், எதிர்க்கட்சியிலிருந்த அரசியல் பிரபலங்களை பழிவாங்கும் தேவை நல்லாட்சி அரசுக்கு இருந்தாலும், அதைச் செய்ய முடியாத தர்மசங்கடமும் இருந்தது.
போர் வெற்றியைக் காட்டிக் கொடுப்பது தென்னிலங்கை வாக்குகளில் சரிவை ஏற்படுத்துமென்ற அச்சமே,இந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்று நிலைமைகள் முற்றாக மாறி, முழு நாட்டையும் சர்வதேசத்திடம் சரணடையும் நிலைமைக்கு களம் இறுகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல்-04 வௌியிட்ட காணொளிகள் இலங்கை அரசாங்கங்களின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஆட்சி மாற்றங்களுக்காக மதங்களை ஊக்கியாகப் பயன்படுத்தும் ஈனச்செயல்களை எல்லாம் அம்பலப்படுத்தி உள்ளன.
ஈஸ்டர் தாக்குதலுடன் முன்னாள் பிரபலங்கள் தொடர்புற்றிருப்பதாகக் கருதப்படுவதால் சர்வதேச விசாரணைகள் அவசியத்தை உணர்த்தி நாட்டில் மூலை, முடுக்குகளிலிருந்து குரல்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், தமிழர் தரப்பும் முள்ளிவாய்க்கால படுகொலைகள் மற்றும் யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் நடந்தவற்றுக்கும் சர்வதேச விசாரணைகளைக் கோருகின்றன.
இதனால், உள்நாட்டுப் பொறிமுறையிலான தீர்வுகள் மற்றும் உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியஸ்தர் குற்றச்சாட்டுக் களிலிருந்து விடுவிக்கப்பட்டமை மற்றும் அவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை என்பவை எல்லாம் இலங்கையில், ஆட்சியாளர்களின் அழுத்தங்களுக்கு நீதித்துறை உள்ளாவதை அப்பட்டமாக்கியுள்ளது. இதனால் தான், உள்ளகப்பொறிமுறை மற்றும் உள்நாட்டு விசாரணைகளில் சர்வதேசம் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.