- இதுவரை இரு அப்பாவி உயிர்கள் பலி
- அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியும் தொடரும் போராட்டம்
- உயிர் இழப்புகளுக்கு பொறுப்பேற்க யாரும் இல்லை
க.குணராசா – ceylonsri
Locomotives Operating Engineers Union – இயந்திர இயக்க பொறியியலாளர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் கடுமையான பாதிப்பினை எதிர் கொண்டு வருவதை காண முடிகின்றது. ரயில்வே பொறியலாளர்களின் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கின்றது. ரயில் சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாக நேற்று பிரகடனப்படுத்தி இருக்கின்ற நிலையிலும் போராட்டத்தை தொடர்வதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதனால், தற்போது வரை அலுவலக ரயில்கள் உட்பட 119 க்கும் அதிகமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொழும்பு மாநகர் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஓடுகின்ற ஓரிரு மட்டுப்படுத்தப்பட்ட ரயில்களிலும் பயணிகள் தொங்கிச் செல்கின்ற காட்சிகள் மயிர்க்கூச்செறியச் செய்கின்றன. மூன்று நாட்களாக தொடரும் இந்த வேலை நிறுத்தத்தால், இதுவரை இருவர் பலியாகியுள்ளனர்.
இட நெருக்கடியால் ரயில் பெட்டியின் மேல் ஏறிப் பயணம் செய்தவர்களில், பல்கலைக்கழக மாணவனொருவன் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார். கண்டி மாநகரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இதே போல, கொழும்பிலிருந்து வாதுவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், பயணம் செய்த இன்னொருவர் ரயிலில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்திருக்கிறார்.
இந்த சம்பவங்கள் இலங்கையில் எதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தொழிற்சங்க போராட்டத்தினால் இரண்டு அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதற்கு பொறுப்பு ஏற்பவர்கள் யார்…?
“தொழிற்சங்கங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என அரசாங்கம் அடித்து சொல்கிறது. கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை ஆணித்தரமாக கூறுகிறார்.
“மக்கள் பாதிக்கப்படுகின்ற வகையில், தொழிற்சங்க நடவடிக்கைகள் ஈடுபடுவது தொழிற்சங்க பயங்கரவாதம்” என அவர் சுட்டிக் காட்டினார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்கள் இப்படி எழுந்த மானமாக ஈடுபடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கும் அவர், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கிறார். “இந்த அப்பாவிகளின் உயிரிழப்புக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் ” என்று தொழிற்சங்கம் கூறுகிறது. “ஐந்து வருடங்களுக்கும் மேலாக தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. ஆகவே, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை ” என தொழிற்சங்க தலைவர் கூறுகின்றார்.
இவ்வாறு இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டும் இந்த நிலையில், பொதுமக்கள் தான் பணய கைதிகளாக வைக்கப்படுகிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகிறது. பேச்சுவார்த்தை மூலம் இந்த இழுபறி யான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ரயில்வே சாரதிகளின் பிரச்சனை நியாயமான முறையில் அலசி ஆராயப்பட்டு அரசாங்கம் உரிய முறையில் தீர்வை முன் வைக்க வேண்டும்.

அரசியல் காய் நகர்த்தல்கள் மூலம், பிரச்சனைக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வது நாட்டில் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரம் அல்ல, இப்படியான கெடு பிடிகளுக்கும் வழிவகுக்கும் . தொழில் சங்கங்களின் போராட்டங்கள், தொழிலாளர் பிரச்சினைகளில் அரசாங்கம் வெளிப்படை தன்மையோடு நடந்து கொள்வதே ஆரோக்கியமாக இருக்கும்.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் தான் அரசாங்கம் செயல்படுவதற்கு முயற்சி செய்யுமாக இருந்தால், இன்றைய நிலையில், போராட்டங்கள் புது வடிவில் உருவெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. எனவே, அரசாங்கமும் விதண்டாவாதங்களை தவிர்த்து, யதார்த்த அணுகுமுறைகளை கையாள்வது தான் சிறப்பு.
இன்றைய நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, தொழிற்சங்கங்களும் விட்டுக்கொடுப்போடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியம். இதை விடுத்து, அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு, தொழிற்சங்கம் போராட்டங்களில் குதித்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஒப்பானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தொழிற்சங்க போராட்டத்தின் மூலம், மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டதனால் தான், இரண்டு அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன.
ஆனால், ஒன்றை மட்டும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். “சாதுமிரண்டால் காடு கொள்ளாது”. மக்களின் பொறுமையை தவறாக கணக்குப் போட்டு விடாதீர்கள். மனித கேடயங்கள் என்ற இந்த அழுத்தத்துக்கு ஓரளவு தான் மக்கள் ஈடு கொடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆகவே, அரசாங்கமும் தொழிற்சங்கமும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமுக தீர்வை காண்பது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். இதே வேளை, நாடளாவிய ரீதியில் 32 புகையிரத நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாதுகாப்பு யாருக்கு என்ற கேள்வி எழுகின்றது. இந்தத் தொழிற்சங்க போராட்டத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது மக்கள். இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையிலும், போராட்டத்தை கைவிடாமல் தொழிற்சங்கங்கள் சர்வாதிகார போக்கில் செயல்படுகின்றன. இந்த நிலையில் பாதுகாப்பு தொழிற்சங்கங்களுக்கா ? அல்லது மக்களுக்கா ….?என்ற கேள்வியை கேட்க வேண்டி இருக்கிறது.
ஆகவே, மக்களின் பொறுமையை சோதிக்காமல், தொழிற்சங்கம் தங்களது அடம்பிடிப்பை மீள்பரிசீலனை செய்வதுதான் ஆரோக்கியமான முன்னெடுப்பாக இருக்கும்.