மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

63

(ஹற்றன் நிருபர்)

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.

அட்டனில் (12.09.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தற்போது உரிமைசார் விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகள், லயன் வீடுகள் என தோட்டப்பகுதிகளில் முகவரி இல்லாத அனைவருக்கும் முகவரி வழங்கப்படும். இதற்கான திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது இலக்கம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது, அப்பணி நிறைவுபெற்ற பின்னர் அனைத்து தரவுகளும் தோட்ட நிர்வாகம், கிராம அதிகாரி, அஞ்சல் மா அதிபர் ஆகிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும். கேகாலை மாவட்டத்தில் தற்போது பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டு திட்ட பணிகளும் இடம்பெறும். 10 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீட்டுக்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மலையக மக்களுக்காக இந்திய அரசால் அண்மையில் ஒதுக்கப்பட்ட விசேட நிதி கல்வி, சுகாதாரத்துறைகளுக்காக பயன்படுத்தப்படும்.” – என்றார்.

Join Our WhatsApp Group