இதை செய்யுங்க, இல்லனா ஐபோன் விற்பனைய நிறுத்துங்க – பிரெஞ்சு நிறுவனம் அதிரடி

40

ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தல். ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஐபோன் 12 மாடலில் இருந்து அளவுக்கு அதிகமான மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ரேடியோ-எலெக்ட்ரிக் அதிர்வெண்கள் மற்றும் பொது வெளியில் பரவும் மின்காந்த கதிர்வீச்சை கவனித்து வரும் தேசிய ஃபிரீக்வன்சி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கையில், ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக ஆப்பிள் வெளியிடும் அப்டேட்களை அரசு நிறுவனம் கவனிக்கும் என்றும், ஒருவேளை இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த ஐபோன்களையும் திரும்ப பெற வேண்டியிருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ANFR என்று அறியப்படும் இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் மனித உடலால் ஈர்க்கப்படக் கூடிய மின்காந்த கதிர்வீச்சு செல்போன்களில் இருந்து எந்த அளவுக்கு வெளிப்படுகிறது என்று சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் ஐபோன் 12 மாடலில் இருந்து ஒரு கிலோகிராமிற்கு 5.74 வாட்ஸ் வரையிலான மின்காந்த கதிர்வீச்சு வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஐரோப்பிய யூனியன் அனுமதித்து இருக்கும் ஒரு கிலோகிராமிற்கு 4.0 வாட்ஸ் என்ற அளவை விட அதிகம் ஆகும்.

Join Our WhatsApp Group