மக்கள் மத்தியில் மனநிலையில் மாற்றம் : இனப்பிரச்சினையை தீர்க்க ரணிலுக்கு பூரண ஆதரவு – சந்திரிகா

30

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப்போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார்.

மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டியதில்லை எனவும், மேற்படி அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரியும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.

“நாட்டில் போர் முடிவடைந்தாலும் போருக்கு வித்திட்ட பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகூட எடுக்கப்படவில்லை.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அது சட்டப்பூர்வமானது, அதனை அமுல்படுத்துமாறே தமிழ்த் தலைவர்கள் கோருகின்றனர். இதனை ஏன் அமுல்படுத்த முடியாது?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். இது தொடர்பில் என்னுடனும் பேச்சு நடத்தினார். முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என நான் கூறினேன்.

ஆனால் நாட்டில் மாகாணசபைகள் இயங்கவில்லை. அதிகாரத்தை பகிர மாகாணசபை இருக்க வேண்டும். அப்படியானால் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவே சிறந்த தருணம். அன்று சந்திரிக்கா செய்தது சரி என்பதை மக்கள் இன்று ஏற்கின்றனர். 13 இற்கு அப்பால் சென்று அன்று நான் தீர்வை முன்வைத்தேன், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவற்கு 7 வாக்குகள்தான் போதுமானதாக இருக்கவில்லை.

அந்த வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கவில்லை. அவர்களுடன் ஐந்து மாதங்கள் பேச்சு நடத்திய பின்னரே அரசமைப்பை கொண்டுவந்தேன், பலவந்தமாக திணிக்கவில்லை. ஆனால் எதிர்த்து தீயிட்டுக்கொளுத்தினர்.

அத்துடன் இனப்பிரச்சினை விடயத்தில் அறகலய ஊடாகவும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கம் பிறந்துள்ளது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

இளைஞர், யுவதிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளை காணும்போது விழிநீர் வந்தது. இது சிறந்த தருணம். நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் மறுநாளே இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்திருப்பேன்.

Join Our WhatsApp Group