சனல் 4 விசாரணை : புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் : ஹரீஸ் எம்.பி

26

(நூருல் ஹுதா உமர்)

நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த ஆசாத் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தினால் மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் இப்போது இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதி என்றவகையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஆசாத் மௌலானாவின் ஊடக வெளிப்படுதலை அடிப்படையாக கொண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் இந்த விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்களை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (11) மாலை கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கைகள் மழுப்பல் நிலையிலையே வெளிவந்தது. அதில் யாருக்கும் திருப்தியில்லை. இந்த தாக்குதலானது பாரதூரமான விளைவுகளை உண்டாக்கிய ஒன்றாகும். இந்த விடயம் தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் புலனாய்வு அறிக்கைகள் பெறப்பட வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரச புலனாய்வு துறை இவ்விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துகொண்டிருக்கும் போது போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை நோகடிக்க அனுமதிக்க முடியாது. இவர்களின் இப்படியான போக்குகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஆஸாத் மௌலானாவின் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது கடந்த கால சம்பவங்களுடன் அவரது கருத்துக்கள் ஒத்துப்போகிறது. காத்தான்குடி வயோதிபரின் கொலை, பொலிஸாரின் கொலை, குண்டுவெடிப்பு போன்ற விடயங்கள் நடந்து, நீதிமன்றம் சஹ்ரானுக்கு கைதாணை வழங்கியும் அவர் சுதந்திரமாக நடமாட காரணமாக இருந்தவர்கள் தொடர்பில் இப்போது உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளது. மிகத்திறமையான புலனாய்வு பிரிவை கொண்ட எமது நாட்டின் புலனாய்வு பிரிவு சஹ்ரானை கைது செய்யாமைக்கான காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குகளின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த தாக்குகளில் முஸ்லிங்களும், கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஜனாதிபதி எந்த பக்கசார்புமின்றி நடப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த தகுதி, தராதரமுமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும், சர்வதேச பொலிஸாரின் புலனாய்வு அறிக்கையும், சர்வதேச விசாரணையும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

Join Our WhatsApp Group