(நிப்ராஸ்)
நாட்டின் அந்தரங்கங்களை கிளறிவிடும் அலைவரிசையாக தென்னிலங்கையில், சனல்-04 நோக்கப்படுகிறது.ஐ,நா மனித உரிமைகள் மாநாடு நடைபெறும் சூழலில் அல்லது தேசிய தேர்தல்களின்போதுதான், இவ்வாறு இலங்கையின் அந்தரங்கங்கள் அதிகம் கிளறப்படுகின்றன.
பெரும்பாலும் சனல்-04 போன்ற ஐரோப்பிய அலைவரிசைகள் இதைச் செய்வதாலே இத்தோற்றம் ஏற்படுகிறது. இது,ஏற்பட்டால் ராஜபக்ஷக்களின் மவுசு அதிகரிப்பதும் 2009 க்குப் பின்னர் வழமையாகியுள்ளது.இதனால்,இத்தோற்றம் ஏற்படாமல் பாதுகாப்பதில் ஏனைய சிங்கள கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. ஐரோப்பாவில் புலம் பெயர் தமிழர்களின் பலம் இருக்கும் வரைக்கும் ராஜபக்ஷக்களின் கரங்கள் பலமாகவே இருக்கும்.யுத்தத்தின் பின்னர் கட்டமைந்த நியதி இது.இந்த நியதியைத் தகர்ப்பதில்தான் தென்னிலங்கையின் ஏனைய சிங்களக் கட்சிகளின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
எனவே,இதைத் தகர்க்க ஏனைய சிங்கள கட்சிகளும் தக்க வைக்க ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவும் களத்தில் இறங்க தயாராகி வருகின்றன. ஒட்டு மொத்தமாக இலங்கையின் எதிர்கால அரசியலில் பெரிய மாற்றம் நிகழ்வதற்கான சாத்தியங்களை சனல்-04 அலைவரிசை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, தயாராகியிருந்த தீர்மானங்களையே இந்த சனல்-04 மாற்றியுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நினைத்திருந்தது.ஏனைய அதிகாரங்களை தம்பிடியில் வைத்திருந்தாலும் நிறைவேற்றதிகாரமும்,பாராளுமன்றமும் மோதும் சூழலில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க இம்முடிவை தவிர்த்துக் கொண்டது.
இதைப்புரிந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி,உள்ள அதிகாரத்தைப் பாவித்து பிரித்தாளும் போரில் இறங்கியதால் வந்த வினையாக இந்த சனல்-04 இருக்கலாம் என்கின்றனர் சிலர்.எனவே,இந்தப் பிரித்தாளும் போருக்குள் சிறுபான்மை தலைமைகள் கச்சிமாகக் காய்களை நகர்த்துவதே எதிர்காலத்தில் சிறந்த கனிகளைப் பறிக்க உதவும்.