“நாயை” போலவே தோட்ட அதிகாரிகள் நடத்துகின்றனர்; இளம் தம்பதியினர் ஆதங்கம்

36

இரத்தினபுரி – கஹவத்தை, வெள்ளந்துரை தோட்ட பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடு, தோட்ட நிர்வாகத்தால் தகர்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குறித்த வீட்டில் தங்கியிருந்த இளம் தம்பதியினர் தோட்ட நிர்வாக அதிகரிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் போது காலணிகளை கழற்றிவிட்டே வரவேண்டும் என பணிக்கப்படுவதாக அந்த தம்பதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வசதி படைத்தவர்கள் மற்றும் பெரும்பான்மையினத்தவர்கள் காரியாலயத்திற்கு வரும்போது ஒரு விதத்தில் நடத்தப்படுவதாகவும், ஏழ்மையான எங்களை போன்றவர்கள் ஒரு விதமாக நடத்தப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தோட்ட தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள எங்களது சந்ததியினர் போன்றே தாமும் பெருந்தோட்ட தொழிற்துறையில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் லயன் குடியிருப்பு அறை ஒன்றை தவிர வேறு எதனையும் நிர்வாகத்திடம் இருந்து தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தங்குவதற்கு வீடுகள் தேவைப்படின், லயன் குடியிருப்பு தொகுதிகளுக்கு அருகாமையிலேயே அமைத்துக்கொள்ளுமாறும், அவ்வாறு இல்லாமல் வேறு எங்காவது குடியிருப்புகள் அமைக்கப்படுமாயின் அவை தகர்க்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

பல்கலைக்கழக கல்வியை தொடரவுள்ள என்னை தோட்டத்தில் பதிவு செய்து பெருந்தோட்ட தொழில் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகம் என்ற ரீதியில் நாங்கள் முன்னேறுவதை அதிகாரிகள் விரும்புவதில்லை எனவும், தம்மை அடிமைகளாகவே வைத்திருக்க அதிகாரிகள் முற்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டாம் திகதி எங்களின் தற்காலிக குடியிருப்பை தாக்கி சேதப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை மீண்டும் வந்து தாக்கினர்.

விசேட அதிரடிப்படையினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.

எங்களை லயன் குடியிருப்பை தவிர வேறு எதனையும் எதிர்ப்பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மிகவும் மரியாதை குறைந்த வார்த்தைகளிலேயே எங்களை பேசுகின்றனர். நாயை போன்று எங்களிடம் அதிகாரிகள் மோசமாக நடந்துகொள்கின்றனர்” என அந்த தம்பதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இரத்தினபுரி – கஹவத்தை, வெள்ளந்துரை தோட்ட பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடு தோட்ட நிர்வாகத்தால் தகர்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

Join Our WhatsApp Group