நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா (படங்கள்)

24

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா இன்று (11) காலை (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்தனர். மாம்பழ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அத்தோடு நேற்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார்.

இத்திருவிழாவானது, பின்வரும் புராணக்கதையை மையமாக கொண்டு நடைபெற்று வருகின்றது. சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர்.

உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றிவர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றிவந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார். எனவே, இக்கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Join Our WhatsApp Group