அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் பலி

24

யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் நேற்று (10) இரவு 08 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த, கோப்பாய் மத்தியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் திருத்தக உரிமையாளரான 44 வயதுடைய எமில் ரவி என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து அதிசொகுசு பேருந்தின் சாரதி, பேருந்தை அவ்விடத்தை விட்டு தப்பித்து சென்ற நிலையில், அவ்விடத்தில் கூடியோர் குழப்பத்தில் ஈடுப்பட்டு பேருந்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூடிய மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, உயிரிழந்தவரின் சடலத்தை பொலிஸ் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

“விபத்து இடம்பெற்ற அதிசொகுசு பேருந்து கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடுகின்றது. அதில் பயணிகள் இருந்தனர். விபத்தையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேருந்தை தாக்கியதுடன், பொலிஸாரையும் தாக்கினர். அதனால் அப்பகுதியில் கூடியவர்களை அகற்றினோம்” என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை பேருந்து சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group