மொரோக்கோ நிலநடுக்கம்; அவசர நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள லைகாவின் ஞானம் அறக்கட்டளை

23

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை அவசர நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளது.

மொரோக்கோவின் மராகேஷ் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த அனர்த்தத்தில் 2000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் உதவியுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரணப் பணிகளை வழங்க லைகாவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலநடுக்கம் குறித்த செய்திகள் வெளியானதும் லைகா நிறுவனத்தின் தலைவர் துரித நடவடிக்கைகளை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க அர்ப்பணிப்புள்ள களக் குழுவை அணிதிரட்டினார்.

அத்துடன், பிரித்தானியாவில் உள்ள லைகா நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து குழுவொன்று அனுப்பப்பட்டு, உணவு, தங்குமிடம், மீட்பு முயற்சிகள் மற்றும் பிற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய களத்தில் இருக்கும் குழுவும், பிரித்தானியாவில் இருந்து செல்லும் குழுவும் முழுமையாகத் தயாராக இருக்கின்றன.

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டின் மிகக் கொடிய நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதுடன் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாக, மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவ ஞானம் அறக்கட்டளை கடமைப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஞானம் அறக்கட்டளை, கூட்டு நடவடிக்கை மற்றும் சமூக ஆதரவின் சக்தியை உறுதியாக நம்புகிறது.

நிவாரண முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்ய, உள்ளூர் அதிகாரிகள், நிவாரண அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுகின்றது.

இந்த இயற்கை பேரிடரின்போது தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் துணை நிற்போம் என ஞானம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group