ஜனாதிபதியின் ‘பாடசாலை மூலதனச் சந்தை கழகங்கள்’ எதிர்காலத்திற்கான பாரிய முதலீடு

16

**கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை கழகங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

நிதி தொடர்பான கல்வியறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான நபர்கள், மாணவர் சந்ததியே எனவும், பாடசாலைகள் ஊடாக இத்திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதியின் தீர்மானம் காலத்திற்குப் பொருத்தமான முடிவு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘1O1 கதா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ராஜீவ பண்டாரநாயக்க,

‘மூலதனச் சந்தை சங்கங்கள்’ மூலம் பங்குச் சந்தை தொடர்பில் முறையான தெளிவை மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்க்கிறோம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்தரப் பெறுபேறுகளின்படி வர்த்தகத் துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் 100 மூலதனச் சந்தைச் சங்கங்கள் நிறுவப்படவுள்ளன.

இதன் மூலம் மாணவர்களுக்கு மூலதனச் சந்தை பற்றிய விரிவான புரிதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பரந்த அறிவைப் பெறுவதோடு, நடைமுறை அறிவையும் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

வங்கித் துறை பற்றிய அறிவு பாடசாலைகளில் கொடுக்கப்பட்டாலும், மூலதனச் சந்தை பற்றிய அறிவை அளிக்கும் நிலை குறைவாகவே உள்ளது. நிதி அறிவும் குறைவாக உள்ளது. எனவே, அதையும் தாண்டி வணிக ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை விரிவுபடுத்துவது, அதாவது கலை, அறிவியல், கணிதம் போன்ற எந்தத் துறை மாணவர்களுக்கும் மூலதனச் சந்தை பற்றிய ஓரளவு அறிவை இச்சங்கங்கள் மூலம் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளிடம் நிதியியல் படிப்பில் புதிய பரிமாணத்தை உருவாக்க எண்ணுகிறோம்.

இங்கு செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு மேலதிகமாக நடைமுறை அறிவை வழங்க முயற்சிக்கிறோம். தற்போதைய தலைமுறை மாணவர்களின் மூலதனச் சந்தை பற்றிய அறிவையும் புரிதலையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, இது அவர்களை சமூகத்துடன் இணைவதற்காக தயார்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அவர்கள் சுயமாக தொழில்முனைவோராக மாறவும், தங்களையும், நாட்டையும் திறம்பட மேம்படுத்துவதில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தத் திட்டம் பல கூறுகளைக் கொண்டுள்ளது. மாணவர்கள் அறிவு மற்றும் புரிதலுக்கான செயலமர்வுளை நடத்தி போட்டிகள் நடத்துவதன் மூலம் நடைமுறை அறிவை வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக, பாடசாலைகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கி அவற்றை முதலீடு செய்வதற்கு அவர்களுக்க சந்தர்ப்பம் வழங்கவும் அதன் பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு பரிசில் வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலையின் மூலதன சந்தை சங்கத்தின் 10 அங்கத்தவர்களுக்கும் சங்கத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்களுக்கும் சிங்கப்பூர் சென்று பங்குச்சந்தை பற்றிய அனுபவம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தேவையான முறைமைகளை தயாரித்து வருகிறோம்.

கல்வி அமைச்சு, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிய அளவிலான வர்த்தக முயற்சிகளுக்கு இப்போது பங்குச் சந்தையில் சேரவும், தங்கள் வணிகத்தை மேம்படுத்த மூலதனத்தைப் பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்தியா போன்ற வளர்ச்சியடைந்த நாட்டு பொருளாதாரங்களில் மூலதனச் சந்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பங்குச் சந்தையின் சந்தை மூலதனம் மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது.

இது இலங்கையில் சுமார் 25% ஆகவே உள்ளது. இது இந்தியா போன்ற நாட்டில் 80%-85% ஆகவும், மலேசியாவில் 100% ஆகவும் உள்ளது. அதன்படி, பங்குச் சந்தையின் பங்களிப்பு ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நமது நாட்டின் பங்குச் சந்தையும் இதே நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு, நிதி பற்றிய கல்வியறிவு உயர் மட்டத்தில் இருக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க இந்த மூலதன சந்தை சங்கங்களின் ஊடாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பங்குச் சந்தை டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், இன்றைய இளைஞர்கள் அதைக் கையாள்வது எளிதாக உள்ளது. ஏனெனில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விரல் நுனியில் உள்ளன. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து நடவடிக்கைகளும் உலகில் எங்கிருந்தும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக மேற்கொள்ள முடியும்.

பாடசாலை மாணவர்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான நெருக்கம் காரணமாக பாடசாலை மட்டத்தில் இதனை பிரபலப்படுத்துவதே சிறந்தது என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். உண்மையில், ஜனாதிபதியின் இந்தத் திட்டம் மிகவும் சரியானது. அது வெற்றியடையும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அரசாங்கத்தினால் தொழில் கிடைக்கும் வரை காத்திருக்காமல் பாடசாலை மாணவர்கள் புதிதாக சிந்திக்க வேண்டும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தால், இன்றைய இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் கட்டுப்பாடற்ற வாய்ப்புகள் உள்ளன . அதற்கான வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்க இருக்கிறோம். மாணவர்கள் மத்தியில் தொழில்முனைவோரை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்கவுடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட ‘One-O-One Talks’ நிகழ்ச்சி தொடர்பான காணொளிகள் https://youtu.be/5aTmSb2Sj_4?si=5Rm5p1Mn3Oxp0ch-இணைப்பில் ஊடாக பெறலாம்.

1O1 கதா மூலம் வெளியிடப்படும் புதிய தகவல்களைப் பெற, இந்த இணைப்பின் மூலம்(https://tinyurl.com/101Katha ) 1O1 கதா வாட்ஸ்அப் குழுவில் சேரவும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
10-09-2023

Join Our WhatsApp Group