கோட்டே ரஜமஹா விகாரையில் வருடாந்த ஸ்ரீ தலதா இறுதி பெரஹரா ஆரம்பம்

13

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையின் வருடாந்த ஸ்ரீ தலதா மஹா பெரஹராவின் இறுதிப் பெரஹரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் நேற்று (09) ஆரம்பமானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிரி தர்ம மகா சங்க சபையின் உப பதிவாளர் கலாநிதி அலுத்நுவர அனுருத்த தேரரைச் சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், லங்காராமாதிபதி இந்தியானா பௌத்த விகாராதிபதி கோட்டே ரஜமஹா விஹாரதிகாரி வண. தலங்கம தேவானந்த தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமய வழிபாடுகளை மேற்கொண்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் பெரஹராவை ஆரம்பித்து வைக்கும் முகமாக ‘கோட்டே ராஜா’ மீது புனித பீடத்தை வைத்தார்.

இந்நிகழ்வில் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group