‘ரஷ்ய – உக்ரைன் போர்’ ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனத்தை வெளியிட்ட இந்தியா

18

உக்ரைன் – ரஷ்ய போரை சர்வதேச பேச்சுவார்த்தையின் ஊடாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென ஜி 20 மாநாட்டில் இந்தியா டெல்லி பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனாவும், உக்ரைனை அமெரிக்காவும் ஆதரிப்பதால், மாநாட்டில் வெளியிடப்பட வேண்டிய கூட்டு பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க எந்த முடிவும் எடுக்கப்படாததால், வரைவறிக்கையில் இந்தியா புதியதாக சில வாக்கியங்களை சேர்த்து தலைவர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ஜி20 தலைவர்களுக்கிடையே பிரகடனம் குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

‘டெல்லி பிரகடனம்’ என அழைக்கப்படும் இந்த அறிக்கையில் உக்ரைன் போர் குறித்து இந்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியாகியுள்ளது.

அதில், “சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றுடன் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் பலதரப்பு அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சட்டங்களின் அடிப்படை கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.”

“நாடுகளுக்கிடையேயான மோதல்களையும் நெருக்கடிகளையும் அமைதியான வழிமுறைகளில் தீர்த்து கொள்ளவும், ராஜதந்திரத்தின் மூலம் பேச்சுவார்த்தையின் மூலமாகவுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.”

“போரினால் உலக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் மோசமான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் முயற்சியில் நாங்கள் ஒன்றுபடுவோம்.

மேலும், அண்டை நாடுகளுக்கிடையே அமைதியான நட்பும் நல்லுறவும் நிலவ ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ எனும் கோட்பாட்டின் அடிப்படையிலும், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையிலும், உக்ரைனில் அமைதியை கொண்டு வர ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்து நிற்க கூடிய அனைத்து வகையான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய காலகட்டம் ஒரு போருக்கான காலகட்டமாக மாறக்கூடாது.” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Join Our WhatsApp Group