தவறை ஒப்புக்கொண்டால் மன்னிக்க தயார் : மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

23

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தான் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக உள்ளதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய முடியவில்லை எனின் நாம் மதங்களை பின்பற்றுவதால் உள்ள பயன் தான் என்ன ? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதன்படி, நேற்று (08) கொழும்பு கொச்சிக்கடை கத்தோலிக்க தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

மேலும் மேலும், புதிய காரணங்கள் , புதிய விடயங்கள் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன.

இவ்வாறான விடயங்களால் சிலருக்கு சில சமயங்களில் கோபம் கூட வர வாய்ப்புண்டு. ஏனெனில் இந்த விடயங்களில் அவர்களது பெயர் பயன்படுத்தப்படுகிறது.

பயப்பட வேண்டிய அவசியம் இல்லை : அவர்களுக்கும் , குறித்த சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை எனில் அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வாறாயினும் இது தொடர்பிலான காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது உரிய தரப்பினரின் பொறுப்பாகும்.

உண்மையான , சாதாரணமான , உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய ஆய்வொன்றை நடத்தி நடந்தது என்ன ?என்பது தொடர்பில் தெரிவியுங்கள்.

அது அவ்வளவு கஷ்டமான ஒரு விடயம் அல்ல.

இந்த சந்தர்ப்பத்தில் நான் எமது நாட்டின் தலைவரிடம் மிகவும் தேவையுடன் கோரிக்கை ஒன்றை விடுக்கின்றேன் .

” இதோ, ஒவ்வொன்றாய் வெளிவர ஆரம்பித்துள்ளன, அதனால் இப்பொழுதாவது நாங்கள் கேட்கும் , உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான ஒரு ஆய்வை மேற்கொள்ளுங்கள். “

அதேபோல் குறித்த சம்பவத்தில் எவரொருவரின் பெயர் தெரிவிக்கப்படுகிறதோ அவர்கள் மரியாதையுடன் தத்தமது பதவிகளிலிருந்து விலக வேண்டும்.

அது தொடர்பில் உரிய ஆய்வுகளை நடத்த முன்வர வேண்டும் . அதுவே நேர்மையான முறை.

நேர்மை என்பது பதவிகளுக்கு பின்னால் மறைந்துக்கொள்வது அல்ல. தான் தவறு செய்திருப்பின் அதனை ஆராய வழிவிடுவது தான் நேர்மை.

அவ்வாறு இல்லையெனில், தவறு செய்ததை ஒப்புக்கொள்ளுதல்.

அவ்வாறு தவறு செய்திருந்தால், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் நாம் மன்னிக்க தயாராக உள்ளோம்.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பாரிய அழிவின் போது truth and reconciliation commission எனும் சபை மூலம் குறித்த தவறை இழைத்தவர்கள் மற்றவர்களிடம் மன்னிப்பு கோரி சமாதானமடைந்தார்கள்.

தவறை ஒப்புக்கொண்டதால் நெல்சன் மண்டேலா தவறிழைத்தவர்களுக்கு மன்னிப்பை வழங்கினார்.

மன்னிப்பு வழங்கி தண்டைனைகள் இன்றி சமுதாயத்தில் ஒழுங்காக வாழ அவர்களுக்கு வாய்ப்பளித்தார்.

நாம் இலங்கைக்குள் சிரேஷ்ட மதங்களை பின்பற்றுபவர்கள் என்பதன் அடிப்படையில் எங்களுக்கும் அதனை செய்ய முடியும்.

அவ்வாறு செய்ய முடியவில்லை எனின் நாம் மதங்களை பின்பற்றுவதால் உள்ள பயன் தான் என்ன ? ” என தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group