ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்னாள் ‘பாரத்’ பெயர் – அரசியல் அரங்கில் மீண்டும் சர்ச்சை

15

ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இன்று காலை தொடங்கிய இம்மாநாடு நாளையுடன் முடிவடைகிறது.

இதில் உலக தலைவர்கள் உலகளாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

இதேவேளை, இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பதிலாக அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரத் என்ற பெயரை ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரபூர்வ ஆவணங்களில் அரசு பயன்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முழுமையான விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்ட முடிவு என அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அளிக்க இருக்கும் ஜி20 விருந்துக்கான அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

இதன் தொடர்ச்சியாக, வரும் 18-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இது நாட்டை பெருமைப்படுத்தும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் பதில் அளித்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி தெரிவிக்கும் கருத்துகளால் இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து, டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாரத் – இந்தியா சர்ச்சையில் இருந்து விலகியிருக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பெயர் மாற்றம் தொடர்பான வாதப் பிரதிவாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை முதல்முறையாக பிரதமர் தனது அமைச்சர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில், இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது மீண்டும் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ளது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஜி20 தலைவர்கள் நிதி நெருக்கடிக்குப் பிறகு உலக வளர்ச்சியை மீட்டெடுக்க முதன்முறையாக ஒன்றிணைந்தனர்.

மகத்தான சவால்களின் நேரத்தில் நாம் சந்திக்கிறோம். மீண்டும் தலைமை வழங்க உலக நாடுகள் ஜி20ஐ எதிர்பார்க்கிறது. இந்த சவால்களை நாம் ஒன்றாகச் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், “ஜி 20 ஆப்பிரிக்க யூனியனை ஜி 20 உறுப்பினராக ஏற்றுக்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

பல வருடங்களாக தீர்வு காணப்படாத நாட்பட்ட சவால்களுக்கு நாம் புதிய வழிமுறைகளில் தீர்வு காண வேண்டும். உலக நாடுகளிடையே பரஸ்பர அவநம்பிக்கை தோன்றியுள்ள சூழ்நிலையை மாற்றி நம்பிக்கையுள்ள நட்பு நாடுகளாக நாம் மாற வேண்டும்.

கோவிட்-19 பெரும் தொற்றிற்கு பிறகு உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தும் நம்பிக்கையும் குறைந்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாடுகளுக்கிடையேயான போர், அந்நிலையை மேலும் நலிவடைய செய்துவிட்டது.

இருப்பினும், கோவிட்-19 பெரும் தொற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக அதனை முறியடித்த நாம் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையையும் வெற்றிகரமாக மாற்ற முடியும். உலக நன்மையையே பொதுவான குறிகோளாக மாற்றி நாம் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

இன்று ஜி 20 மாநாட்டின் தலைமையாக அமர்ந்திருக்கும் இந்தியாவின் சார்பாக நான், உலக நாடுகள் அனைத்தையும் நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதையே குறிக்கோளாக கொள்ளும்படி அழைக்கிறேன்.

Join Our WhatsApp Group