அமைச்சரவையில் இந்த வருடம் மாற்றங்கள் இல்லை

15

அமைச்சரவையில் இந்த வருடம் எந்த மாற்றங்களும் செய்யப்படாது என ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் சந்தர்ப்பத்தில் அமைச்சர்களை நியமிக்க முடியாது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதை அடுத்து அவரை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அதனை தமக்கு வழங்குமாறு சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.

இவர்களில் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என கூறப்படுகிறது.

எனினும் இது சம்பந்தமான ஜனாதிபதி இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளை சுகாதார அமைச்சு பதவி குறித்து கருத்து வெளியிட்டிருந்த பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, அந்த பதவியை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் அவரது மகனும் ஆடைகளை கூட தயார்ப்படுத்தி வைத்திருந்ததாக கூறியிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று தோற்கடிக்கப்பட்டது.

Join Our WhatsApp Group