வவுனியா இரட்டை கொலை – நீதிமன்ற உத்தரவுகள்!

38

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதன்போது, மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். குறித்த மூவரும் தலைமறைவாகவுள்ளதால் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய பகிரங்க பிடியாணை உத்தரவு வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்புக்கு நேற்று (07) திகதியிடப்பட்டிருந்தது. எனினும் அடையாள அணிவகுப்புக்கு உரிய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதானால் குறித்த வழக்கு அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு மீண்டும் திகயிடப்பட்டது.

இதேவேளை, வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருக்கு தொலைபேசி பாவித்தமைக்காக 4 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் கடந்த 24 ஆம் திகதி தொலைபேசி மீட்கப்பட்டதுடன், அதிலிருந்து 3,292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் சென்றமை மற்றும் பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்பகள் உரையாடியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

தொலைபேசி பாவித்தமை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் நீதிமன்றுக்கு தெரிவித்த நிலையில், தொலைபேசி பாவித்த குற்றத்திற்காக பிரதான சந்தேக நபருக்கு 4 மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Join Our WhatsApp Group