புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் அமுல்- நீதி அமைச்சு அறிவிப்பு

64

புதிய ஊழல் தடுப்புச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“21 ஆவது திருத்தச்சட்டத்திற்கு இணங்க புதிய ஊழல் எதிர்ப்பு சட்ட விதிமுறைகளின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் புதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக பொருத்தமான நபர்களை நியமிக்குமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும். அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் இலஞ்ச-ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தை ஜனாதிபதி நியமிப்பார்.

மேற்குறிப்பிட்டவர்களின் ஆட்சேர்ப்புக்கான அளவுகோல் அரசியலமைப்பு சபையால் தயாரிக்கப்படும்.

தற்போதுள்ள இலஞ்ச-ஊழல் ஆணைக்குழுவினால் ஏதேனும் பிழையான தீர்மானங்கள் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது மீளப்பெறப்பட்டாலோ விசாரணை செய்வதற்கு புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலஞ்ச-ஊழல் ஆணைக்குழு 29 வருடங்களாக செயற்பட்ட போதிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் நாட்டில் ஒழிந்துவிடவில்லை. எனவே அரசாங்கம் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச-ஊழல் சட்டமானது பொதுத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் தனியார் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும்” என்றும் குறிப்பிட்டார்.

Join Our WhatsApp Group