கொக்குத்தொடுவாயில்இன்றும் அகழ்வுப் பணிகள் : மீட்கும் தடயங்களில் பாரிய சந்தேகம்

12

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருப்பது, 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளின் மனித எச்சங்களே என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற உடைகள், கண்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாமெனச் சந்தேகிக்கக்கூடிய துணிகள், துப்பாக்கிச் சன்னங்கள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் அதையே உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இரண்டாம்நாள் அகழ்வாய்வுகளை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது, துப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த பெண்களுடைய ஆடைகள், கண்களுக்கு கட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கக்கூடிய வகையிலான துணி, என்பன தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், மனித எச்சங்களும் பகுதியளவில் மீட்கப்பட்டுள்ளன.இந் நிலையில் இங்கு இன்னும் பல மனித எச்சங்கள் இனங்காணப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பே காணப்படுகின்றது.

இவற்றையெல்லாம் அவதானிக்கும்போது, கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகளை இங்கு கொண்டுவந்து கண்களைக் கட்டி, சித்திரவதைக்குட்படுத்தி, துப்பாக்கியால் சுட்டு படுகொலைசெய்து இங்கு புதைத்துள்ளார்கள் என்பதே எனது நிலைப்பாடாகவிருக்கின்றது.

Join Our WhatsApp Group