7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக வாக்குமூலம்: விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

25

சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகிறார்கள்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் மேற்பார்வையில் விஜயலட்சுமி அளித்துள்ள புகார் மீது அடுத்தடுத்து போலீசார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக போலீஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் நடந்தது என்ன? என்பது பற்றி விஜயலட்சுமி கடந்த வாரம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகார் மீது போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதன்படி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலையில் விஜயலட்சுமி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்த போது 5 தனிப்படையினர் அங்கு விரைந்திருந்தனர். இதனால் சீமான் மீது கைது நடவடிக்கை பாய இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது சம்மன் கொடுப்பதற்காகவே கோவை சென்றுள்ளோம் என்று தெரிவித்தனர். ஆனால் சீமான் தரப்பில் சென்னைக்கு வந்த பின் சம்மனை வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சீமான் மீதான புகாரில் விஜயலட்சுமிக்கு போலீசார் திடீரென மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜயலட்சுமி புகாரில் போலீசார் அடுத்து மேற்கொள்ள உள்ள நடவடிக்கை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Join Our WhatsApp Group