கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களுக்குள் துப்பாக்கி சன்னங்கள் மீட்பு

17

மனித எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று இன்றைய அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டாவது நாளாகவும் இன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்றிருந்து. இதன்போது மேலதிகமான மனித எலும்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் நாளை அகழ்ந்தெடுக்கப்படும். இன்று வேறு சில முக்கியமான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று அது தவிர கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் பகுத்தறிந்ததன் பிற்பாடே அறியத்தரப்படும்.

எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் முழுவதுமாக இன்னும் எடுக்கப்படவில்லை பகுதியளவிலேயே எடுக்கப்பட்டுள்ளது. உடுப்புக்களில் சில தடயம் இருக்கின்றது இதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் தான் இது தொடர்பாக கூறமுடியும்.

ஒன்று அல்லது இரண்டு தான் நாம் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாது ஏனெனில் முழுவதுமாக எடுத்ததன் பின்னர் தான் எத்தனை என கூறமுடியும் .

மனித புதைகுழிக்குள் இருந்து தான் துப்பாக்கி சன்னம் எடுக்கப்பட்டது.
இரண்டு துண்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. அது துப்பாக்கி சன்னம் என்றே சந்தேகிக்கப்படுகின்றது. அடையாளங்களும் இருக்கின்றது அது பகுப்பாய்வு செய்ததன் பின்னர் தான் தெரிவிக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவ இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்றிருந்தது.

குறித்த அகழ்வு பணியின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திர பிரகாஷ், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

Join Our WhatsApp Group