1975-ல் சிறைதண்டனை; 47-வருடம் கழித்து குற்றமற்றவர் என விடுதலை

34

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ளது வெஸ்ட்செஸ்டர் கவுன்டி பகுதி.1975-ல் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு சிறுமி மற்றொரு சிறுமியுடன் பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவன் அவர்களை வழிமறித்து, அந்த சிறுமியை கடத்தி, பாலியல் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றான்.

இச்சம்பவம் குறித்து அந்த சிறுமி தெரிவித்த அடையாளங்களை கொண்டு பெரும்பாலும் வெள்ளையின மக்கள் வசிக்கும் அப்பகுதியில் இருந்த லியோனார்டு மேக் எனும் அமெரிக்க ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நீண்ட கால சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்காவில் சிறையில் தவறான காரணங்களுக்காக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு உதவ, அந்நாட்டில் 1992-ல் “இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்” எனும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் மேக் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கை கையிலெடுத்து விசாரித்தனர்.மேக் வழக்கு விசாரணை செய்யப்பட்ட காலகட்டத்தில் குற்றவியல் விசாரணை முறையில் மரபணு (DNA) பரிசோதனையும், அது தொடர்பான தடயங்கள் நீதிமன்றங்களில் பரிசீலிக்கப்படுவதும் வழக்கத்தில் இல்லை.அதனால், இவ்வழக்கை எடுத்த இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட் அமைப்பு மரபணு பரிசோதனையின் மூலம் 1975-ல் சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்தியது லியோனார்டு மேக் அல்ல என கண்டறிந்தது.

இதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் மேக் விடுதலை செய்யப்பட்டார்.செய்யாத குற்றத்திற்கு 47 வருட சிறை தண்டனை அனுபவித்து தற்போது குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி விடுதலை ஆனது குறித்து மேக், “இறுதியாக நான் சுதந்திரம் பெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group