இலங்கை பல்கலைக்கழகங்கள் உலக தரவரிசையில் வீழ்ச்சியடையும் அபாயம்: FUTA

69

பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் – மாணவர் விகிதம் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியடையும் அபாயம் இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.

சராசரியாக, ஒரு பல்கலைக்கழகம் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற உலக அங்கீகாரம் பெற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இலங்கையில் இந்த எண்ணிக்கை தற்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக குறைந்துள்ளதாக FUTA வெளிப்படுத்துகிறது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் FUTA உறுப்பினர்கள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 600 பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக FUTA இன் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹகா தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி விதிப்பினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடந்த மார்ச் மாதம் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அரசாங்கப் பிரதிநிதிகள் தங்களுக்குச் சில வரிச் சலுகைகள் வழங்கப்படும் என வழங்கிய உறுதிமொழியின் காரணமாகவே தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பன்னஹக்க தெரிவித்தார். அதன் பின்னர் எவரும் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக 1,024 விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர், அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளருக்கான முதிர்ச்சியைப் பெறுவதற்கு குறைந்தது 10 வருடங்கள் ஆகும் என அவர் வலியுறுத்தினார். FUTA இன் பேராதனைக் கிளையின் தலைவர் கலாநிதி ருச்சிகா பெர்னாண்டோ கூறியதாவது: ஜூலை 2023க்குள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 15,000 மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்த மாணவர் எண்ணிக்கையை பொருத்த 1,400 ஆசிரியர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 800 பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில் பேராதனை பல்கலைக்கழகம் உலக தரவரிசையில் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Join Our WhatsApp Group