ஆனமடுவ பிரதேசத்தில் மானை வேட்டையாடிய மூவர் கைது

40

ஆனமடுவ, பெட்டிகம பௌத்த விகாரைக்குட்பட்ட பகுதியில் மான்களை வேட்டையாடும் சந்தேக நபர்கள் மூவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் (04) அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட மஹகும்புக்கடவல, ரத்மல்கஹவெவ மற்றும் தொடுவாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒருவர் மான்களை வேட்டையாடும் துப்பாக்கியுடன் அவ்விடத்தில் இருந்து தப்போயோடியுள்ளதாகவும் அவர்கள் கூறினர். காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களர் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனமொன்று அப்பகுதியுள்ள விகாரை ஒன்றுக்குள் சென்று கொண்டிருந்ததை அவதானித்து பின் அங்கு சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த கெப்வண்டியும், வேட்டையாடிய மான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மான்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் கெப் வண்டியானது அதற்கென பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஹவெவ , தொடுவாய் மற்றும் வென்னப்புவ போன்ற பகுதிகளில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இவ்வாறு மான்கள் வேட்டையாடப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சுற்றிவளைப்பின் போது வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியுடன் தப்பியோடிய சந்தேக நபரை தேடி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group