-நிப்ராஸ்
முஸ்லிம் தனித்துவ அரசியலுக்கு வழிவகுத்த அஷ்ரபின் நினைவுகூரலுக்கு தயாராகும் முஸ்லிம் தலைமைகள், அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நுழையும் பாதைகளை தெரிவு செய்வது கட்டாயமாகியுள்ளது.மூன்று தசாப்தத்துக்கு முன்னரிடப்பட்ட அடித்தளத்திலிருந்து முஸ்லிம் அரசியல் எழும்ப முடியாத நிலை உணரப்பட்டுள்ளதாலே புதிய நகர்வுக்கான பாதைகள் அவசியப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு விடுதலைப்போர், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ஜே,ஆர், ஜெயவர்தனவின் இஸ்ரேல் நட்புறவிலிருந்து அஷ்ரபால் இடப்பட்ட அன்றைய அத்திவாரம் இன்று ஆட்டம் காணும் நிலைக்கு வந்துவிட்டது. இதற்கு அவரது இடைவௌியும் பாதிப்பங்களிப்பை செய்திருக்கிறது. மீதியை காலவோட்டங்கள் ஏற்படுத்தி உள்ளன. எனவே, முப்பது வருட அனுபவங்களில் புதியவற்றை அடையாளம் காணும் தேவை முஸ்லிம் அரசியலுக்கு ஏற்பட்டுள்ளது. சமூகத்தை ஒருமைப்படுத்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன், மூன்று காங்கிரஸ்களாக உடைந்தன. உடைந்தாலும் தமிழர்களைப் போல் ஒரு கோட்பாட்டில் ஒன்றுபட இக்கட்சிகளுக்கு இயலாதுள்ளது ஏன்?
ஆயுதப்போராட்டத்தால் அடி மட்டத்திலிருந்து வளர்க்கப்பட்ட தமிழர் தரப்பு அரசியலே, பிராந்திய சக்திகளின் பிடிகளுக்குள் அகப்பட்டு இலக்குத் தடுமாறும் சூழலிது. உச்சக்கட்டளவு சர்வதேசமயப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கே இந்த நிலை. இதற்குள், தேசிய மட்டத்திலாவது பொது இணக்கப்பாட்டுக்கு வராதுள்ள முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை என்னவென்பது? முஸ்லிம் அரசியலை மலினப்படுத்தும் நோக்கில் இது எழுதப்படவில்லை. மிகப்பெரிய ஆளுமை அஷ்ரபின் நினைவேந்தல் இம்முறையும் வழமைபோன்று அரசியல் போட்டிக்கானதாக இருக்கக் கூடாது. இந்நன்னோக்கில்தான், இது எழுதப்படுகிறது. பொதுவாக சிறுபான்மை அரசியல்களின் வீழ்ச்சி தமிழ்பேசும் மக்களின் இடைவௌியால் ஏற்படுகிறதா? அல்லது மத்திய அரசின் அதிகாரப்பங்கீடுகள் தமிழ்,முஸ்லிம் தரப்புக்குள் ஐய்யத்தை ஏற்படுத்தி அதிகாரக் கருவறுப்புக்களை தூண்டி விடுகிறதா?
எனவே, தென்னிலங்கையின் நிர்வாகத்தில் இருக்கலாம், தமிழர்களுடன் இருக்க இயலாது என முஸ்லிம் தலைமைகள் கருதுகின்றனவா? தமிழ் பேசும் மக்களின் பொதுவான ஆளுகை நிலப்பரப்பு பெரும்பான்மை பலாத்கார அரசியலால் பிடுங்கப்படுகையில், முஸ்லிம் தரப்புக்கள் வாழாவிருப்பதுதான் இக்கேள்வியை எழுப்பி விடுகிறது. இக்கேள்விகளுக்கு இரு தரப்பிலும் பதிலிருப்பது அவசியம்.
இந்தக் கேள்விக்கு தமிழ் தரப்புக்களின் ஒரே குறிக்கோளான (தமிழ் சமஷ்டி) பதிலாக அமையலாம். ஆனால், முஸ்லிம் தரப்பில் எதுவும் பதிலாக இருக்காது. காரணம், தமிழை மொழிக்குள் உள்வாங்குவதா அல்லது இனத்துக்குள் அடையாளப்படுத்து வதா? என்ற குழப்பத்தில் முஸ்லிம் தலைமைகள் உள்ளன. இதுவே, இத்தலைமைகளின் ஒன்றுபடலையும் துருவப்படுத்தி உள்ளது.